‘மூன்றாவது அலை தாக்கும் முன்’... மத்திய, மாநில அரசுகளை அலர்ட் செய்த உயர் நீதிமன்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 10, 2021, 7:09 PM IST
Highlights

மூன்றாவது அலை தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால் மத்திய - மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று  விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு  தலைமை வழக்கறிஞர், முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பின் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தேவையாக 475 மெட்ரிக் டன் உள்ளதால் இதுவும் பற்றாக்குறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மே மாத இறுதியில் ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்னாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

3.50 லட்சம் குப்பி ரெம்டெசிவர் மருந்துகள் கோரிய நிலையில், 2.05 லட்சம் குப்பிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி மருந்தைப் பொறுத்தவரை 76.99 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு, 64.13 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.85 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சப்ளைக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், 5 லட்சம் டோஸ்கள் வந்துள்ளதாகவும் கூறினார். 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 நாட்டில் ஆக்சிஜன்,  ரெம்டெசிவிர் மருந்து சப்ளை தொடர்பாக  உச்ச நீதிமன்றம் தேசிய நிபுணர் குழுவை அமைத்துள்ளதாகக்  தலைமை வழக்கறிஞர் கூறினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மே 15ம் தேதி முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அவர் விளக்கினார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர டெண்டர் கோரப்பட்ட நிலையில், எவரும் விண்ணப்பிக்காததால், விண்ணப்பிப்பதற்கான தேதி இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசு, சுகாதார துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி, தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிந்துரைகள் அளிக்கும் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் சப்ளைக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மூன்றாவது அலை தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால் மத்திய - மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!