
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பானைகள், பத்திரிகைச் செய்தி குறிப்புகளை வெளியிட அரசு இணையதளம் உள்ளது. அதில் கொரோனா தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட Stop Corona என்ற இணையதளம் உள்ளதாகவும் ஆனால் அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.
2021ம் ஆண்டு ஜனவரி முதல் மே 12ம் தேதி வரை பேரிடர் மேலாண்மைத் துறை 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 5 அரசாணைகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும், கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்தம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதனால் கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பிற்பகலிக் தலைமை நீதிபதி அமர்வில் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.
பிற்பகல் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 18ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசின் இணையதளங்களிலும், ஸ்டாப் கொரோனா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.