#BREAKING திருமணத்திற்கான இ-பதிவு முறையில் அதிரடி திருப்பம்... புதிய நிபந்தனைகளுடன் அனுமதி...!

By manimegalai aFirst Published May 19, 2021, 6:45 PM IST
Highlights

மீண்டும் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு புதிய நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

​தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு  பகுதியாக மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க கூட இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இரு தினங்களுக்கு முன்பு  கட்டாயமாக்கப்பட்டது. 

இந்நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. திருமணத்திற்காக நிறைய பேர் விண்ணப்பிப்பதாகவும், அதிகம் பேர் வெளியில் வரக்கூடிய சூழல் இருப்பதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். 

மேலும் திருமண என்ற பிரிவை பலரும் தவறாக பயன்படுத்தி இ-பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இருப்பினும் பொது பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து நேற்று காலை திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் ஏராளமானோர் உடனடியாக விண்ணப்பித்ததால் அந்த பிரிவு சில மணி நேரங்களிலேயே மீண்டும் நீக்கப்பட்டது. இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

இந்நிலையில் மீண்டும் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு புதிய நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும், மணமகன், மணமகள், தாய், தந்தை ஆகியவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதேபோல் விண்ணப்பதாரரின் பெயர் (மணமகன், மணமகள், தாய், தந்தை) அழைப்பிதழில் இருக்க வேண்டும் என்றும், இ-பதிவின் போது திருமண பத்திரிக்கையை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான தகவல் அல்லது ஒரே திருமணத்திற்கு அதிகமுறை இ-பதிவு செய்தால் சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

click me!