எங்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வேண்டும்... திருநங்கைகள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல்...!

By manimegalai aFirst Published May 19, 2021, 4:57 PM IST
Highlights

கொரோனா பெருந்தோற்று காலத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவது போலவே மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

கொரோனா பெருந்தோற்று காலத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவது போலவே மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ்பானு தாக்கல் செய்த மனுவில், கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவ தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள போதும்,  11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளதாகவும், 2,541 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், கடந்த இரு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!