கை மீறும் கொரோனா பாதிப்பு... சென்னை நகைப்பட்டறையில் 22 பேருக்கு தொற்று உறுதி!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 1:01 PM IST
Highlights

இன்று சென்னையில் 2 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது. நேற்றையை நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை  12,684 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையைப் பொறுத்தவரை கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் மட்டும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று தீயாய் பரவி வருவதால் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாளுக்கு நாள் வெளியாகும் முடிவுகளின் படி சென்னையில் வெவ்வேறு பகுதிகளிலும் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று சென்னையில் 2 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

click me!