சென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..!

By karthikeyan VFirst Published Jun 4, 2020, 9:20 PM IST
Highlights

சென்னையில் ஹோட்டல் ஊழியர்கள் பலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால், சென்னையின் பிரபலமான ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 

கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று சென்னையில் 1072 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 18693ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 8563 ஆகும். 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சென்னை தான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத போதிலும், இனிமேலும் ஊரடங்கை நீட்டிக்கமுடியாது என்பதால் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ள சென்னையில், மக்கள், சுய ஒழுக்கத்துடன், கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

கொரோனா யாரிடமிருந்து தொற்றுமோ என்ற பீதியில் மக்கள் இருந்துவருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஹோட்டல் ஊழியர்கள் நிறைய பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது கூடுதல் பீதியை கிளப்பியுள்ளது. ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பிரபலமான ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடமிந்து தொற்று மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. அதனால்தான், தனிமனித இடைவெளி என்பது வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்கையில், ஹோட்டல் ஊழியர்களிடமிருந்து அந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு மிக எளிதாக கொரோனா பரவிவிடும். 

சென்னையின் அடையாளங்களில் ஓன்றாக திகழும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால், ரத்னா கஃபே ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல சென்னையின் மற்றொரு பிரபல ஹோட்டலான மயிலாப்பூர் மாமி மெஸ் ஹோட்டலில் 23 ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் செயல்பட்டுவரும் பல ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் சில ஹோட்டல்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 

எனவே கொரோனாவிலிருந்து சென்னைவாசிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, வீட்டு உணவையே சாப்பிடுவது நல்லது. தமிழ்நாட்டில் கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதால், தொற்று உறுதியாகும் பலருக்கு அறிகுறிகளே இல்லை. எனவே ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா இருந்தால் கூட, அறிகுறி இல்லாததால் அவர்களுக்கே தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்களுக்கே தெரியாமல் அவர்களிடமிருந்து பரவும் அபாயம் உள்ளது. எனவே சென்னைவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

click me!