தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. தொடர்ந்தவர் யார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 29, 2022, 2:38 PM IST
Highlights

தமிழக ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றி பேசி சர்ச்சைக்குள்ளாவதாகவும், பொது நலன் கருதி எடுக்கப்பட்ட தமிழக அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தாக்கல் செய்த மனுவில், தமிழக ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றி பேசி சர்ச்சைக்குள்ளாவதாகவும், பொது நலன் கருதி எடுக்கப்பட்ட தமிழக அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர், ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார் என மனுவில் கூறப்பட்டுள்ளது.எந்த தகுதியின் அடிப்படையில் அவர், ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!