கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அதிரடி நடவடிக்கை.. தனியார் ஆய்வகங்களில் டெஸ்ட் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்

By karthikeyan VFirst Published Apr 12, 2020, 6:36 PM IST
Highlights

தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 10655 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் 1075 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. 

தமிழ்நாட்டை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு நிகரான பாதிப்பை எதிர்கொண்டுள்ள டெல்லி ஆகிய மாநிலங்களில் பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு கூட தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்படவில்லை. 

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவரும் தமிழக அரசு, பரிசோதனையையும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுவரும் நிலையில், டெஸ்ட் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க அரசு தரப்பில் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. 

அதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழ்நாட்டில் 14 அரசு ஆய்வகங்கள் மற்றும் 9 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனியார் ஆய்வகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலானோர் அரசு ஆய்வகங்களிலேயே பரிசோதனை செய்ய விளைகின்றனர். அதனால் அரசு ஆய்வகங்களில் மட்டும் பரிசோதனை அதிகமாக செய்யப்படுவதால் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதனால் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்வோருக்கான கட்டணத்தை அரசே செலுத்த முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

எனவே அரசு ஆய்வகங்களுக்கு நிகராக தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில் விரைவில் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ய முடியும். 
 

click me!