
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் விதமாக பரந்தூர், ஏகனாபுரம் பகுதி மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் இடம்பெயர முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா போராட்டங்களை முன்னெடுத்த பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதப் போக்குடன் செயல்படும் தமிழக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
விளை நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகளை அழித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாகம் காட்டும் முனைப்பு, சுதந்திர இந்தியாவில் தங்களை ஆட்சி செய்யும் மாநில அரசை எதிர்த்து அம்மாநில மக்களே அகதிகளாக வெளியேறும் அளவிற்கு அவலநிலையை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை திரும்பப் பெருவதோடு, தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் பரந்தூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி உரிய தீர்வு காண முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.