குழந்தைகளின் ஹீரோ அம்புலிமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார்

By karthikeyan VFirst Published Oct 1, 2020, 4:40 PM IST
Highlights

அம்புலிமாமா இதழின் ஓவியர் சிவசங்கரன் 97 வயதில் காலமானார்.
 

அம்புலிமாமா என்ற சிறுவர்களுக்காக தொடங்கப்பட்ட இதழில் ஓவியராக இருந்த சிவசங்கரன் வரைந்த ஓவியங்கள், பெரும் வரவேற்பை பெற்றதுடன், சிறுவர்களால் கொண்டாடப்பட்டன. 

1924ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் சிவசங்கரன். அவருக்கு 10 வயது இருக்கும்போதே அவரது குடும்பம் சென்னைக்கு குடியேறியதால் பள்ளிப்படிப்பையெல்லாம் சென்னையிலேயே படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஓவியத்தில் தனக்கு இருந்த ஆர்வத்தின் விளைவாக ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் படித்தார்.

கல்லூரியில் ஓவியப்படிப்பை முடித்த அவர், முதலில் கலைமகள் இதழில் பணியாற்றினார். பின்னர், குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட அம்புலிமாமா இதழில் 1951ல் ஓவியராக சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியான அந்த இதழில், அவர் வரைந்த ஓவியங்கள், இந்திய அளவில் பிரபலமடைந்து, பெரும் வரவேற்பை பெற்றதுடன், அவருக்கு புகழையும் பெற்றுத்தந்தன.

அம்புலிமாமா இதழில் அவர் வரைந்த விக்ரமாதித்தன் வேதாளம் ஓவியங்கள் காலத்தால் அழியாதவை; என்றைக்கும் நிலைத்து நின்று அவரது பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கும். அவரது ஓவியத்திற்காகவே, அந்த இதழ் மாதா மாதம் 2 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. குதிரை, புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள், கட்டிடங்கள் என ஒரு சில விஷயங்களுக்குத்தான் முன்மாதிரிகளை பயன்படுத்தி வரைந்தார். மற்ற அனைத்து ஓவியங்களுமே அவரது கற்பனையில் வரைந்தவைதான்.  கதாபாத்திரங்களை எல்லா கோணத்திலும் வரையும் படைப்பாற்றல் பெற்றவர். ராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் சிவசங்கரன் வரைந்துள்ளார்.

ஓவியங்களால் இந்திய மக்களின் மனதை கவர்ந்த சிவசங்கரன், சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி காலமானார். அவருக்கு வயது 97. அவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 
 

click me!