Latest Videos

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்..

By Raghupati RFirst Published Jun 25, 2024, 8:51 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகியுள்ளது. தலைமறைவானதை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர், நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது சொத்தை 4 பேருக்கு கிரயம் செய்து கொடுக்க வந்திருந்தார்.  அப்போது, சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி, சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ், பிரவீன் ஆகியோர் அளித்தனர்.

பிறகு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் போலியானது என்று ஷோபனாவின் தந்தை பிரகாஷ் புகார் தெரிவித்தார். இதையடுத்து, யுவராஜ், பிரவீன் ஆகியோர் எனது அலுவலகத்துக்கு வந்து, அரசியல் அதிகாரம் மிக்க நபருக்காக இந்த நிலம் பதிவு செய்யப்பட்டது எனவும், கிரயம் செய்த பத்திரத்தை ஒப்படைக்கவில்லை என்றால், வேலைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கிடையாது என்றும் கூறிமிரட்டினர்.

எனது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் பதிவாளர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக யுவராஜ், பிரவீன் உட்பட 7 பேர் மீது கரூர்நகர போலீஸார் கடந்த 9-ம் தேதிவழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி, உத்தரவிடப்பட்டது.  மேலும், இந்த நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஷோபனாவின் தந்தை பிரகாஷ் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர். 100 கோடி மதிப்புள்ள சொத்தை மிரட்டி வாங்கிய வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது - பிரேமலதா ஆக்ரோஷம்

click me!