அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இதனை காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்த்தார். பிறகு பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அன்றாடம் சமூக வலைதளங்களில் காயத்ரி ரகுராம் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார்.
undefined
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் காயத்ரி ரகுராம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.