தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா.. 103 பேர் குணம்.. பரிசோதனை vs பாதிப்பு விகிதம் உணர்த்தும் செய்தி

By karthikeyan VFirst Published Apr 17, 2020, 7:00 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 1323ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக 40க்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அரைசதத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. 

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை அதிகமானோருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. 

ஏப்ரல் 14ம் தேதி 31 பேருக்கும், 15ம் தேதி 38 பேருக்கும் நேற்று 25 பேருக்கும் கொரோனா உறுதியானது. வழக்கமாக கொரோனா பாதிப்பு அப்டேட்டை சுகாதாரத்துறை சார்பில் செயலாளர் பீலா ராஜேஷ் மாலை 6 மணிக்குத்தான் தெரிவிப்பார். ஆனால் நேற்று மதியமே முதல்வர் பழனிசாமி அப்டேட்டை தெரிவித்துவிட்டார். அவர் பேட்டியளிப்பதற்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பான புள்ளிவிவரத்தின் படிதான் அவர் தெரிவித்திருப்பார்.

அதனால் நேற்று பிற்பகல் முதல் இன்று மாலை வரை கிட்டத்தட்ட ஒன்றரை நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 3500க்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 56 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. 

கடந்த 3 தினங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை 56 என்பது பெரிதாக தெரியலாம். பரிசோதனை vs பாதிப்பு எண்ணிக்கைக்கு இடையேயான விகிதம் அதிகரித்துவிடவில்லை. எனவே தமிழ்நாட்டில் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதையே இது உணர்த்துகிறது. இன்று அதிகபட்சமாக தஞ்சாவூரில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரத்தில், ஒரே நாளில் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 283ஆக அதிகரித்துள்ளது.
 

click me!