ஆடம்பரம் இல்ல.. கூட்டம் கூடல..! சமூக விலகலை கடைபிடித்து எளிமையாக நடந்த திருமணம்..!

By Manikandan S R SFirst Published Apr 17, 2020, 12:36 PM IST
Highlights

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் மண்டபங்களில் கூட்டம் கூட்டி நடத்தாமல் முக்கிய உறவினர்களுடன் வீட்டிலேயே நடத்த அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு திருமணம் உறவினர்கள் முன்னிலையில் வீட்டில் எளிமையாக நடந்ததுள்ளது.

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 13,387 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 437 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூகவிலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஊரடங்கு காலத்தில் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒன்றாக திரள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் மண்டபங்களில் கூட்டம் கூட்டி நடத்தாமல் முக்கிய உறவினர்களுடன் வீட்டிலேயே நடத்த அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு திருமணம் உறவினர்கள் முன்னிலையில் வீட்டில் எளிமையாக நடந்ததுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்கிற இளைஞருக்கும் சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ரஞ்சிதா என்கிற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன் இன்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் அரசின் அறிவுரையை ஏற்று வீட்டில் எளிமையாக நடத்த இரு வீட்டிலும் முடிவெடுத்தனர். அதன்படி சென்னையில் இருக்கும் மணப்பெண் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற, கலந்து கொண்ட முக்கிய உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

இதனிடையே முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எம். கிருஷ்ணப்பாவின் உறவினரின் மகள் ரேவதி என்கிற பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டபடி இன்று திருமணம் நடந்தது. முன்னாள் பிரதமர் தேவுகவுடாவின் இல்லத்தில் நடந்த திருமண விழாவிற்கு முக்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

click me!