ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 7, 2019, 11:38 AM IST
Highlights

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்க தடையில்லை என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் இதுதொடர்பான அரசாணையை பிறப்பித்தது. தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காணாமல், அனைத்து குடும்பத்தினருக்கும் சிறப்பு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினரை அடையாளம் காண்பது குறித்து, தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளைப் பின்பற்றவும், அதன்படியே, இந்த சிறப்பு நிதி உதவிகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை இத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது தேர்தல் முடிந்த பிறகு, இந்நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்குவதை எதிர்க்கவில்லை. இந்த உதவி வழங்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையைத் தான் எதிர்க்கிறோம். முதலில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த அரசு, தற்போது தேர்தல் ஆதாயத்துக்காக, ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் கொடுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசாணை போலியானது. அந்த அரசாணை முழுமையானதாக இல்லை. அந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். தற்போது சிறப்பு நிதி உதவிக்காக விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. யாருக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் எனக்கூறி வாதிட்டார்.

மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடையில்லை என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

click me!