நெருங்கும் பண்டிகை காலங்களால் கொரோனா பரவும் அபாயம்.. வேறுவழியில்லாமல் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Sep 29, 2021, 1:04 PM IST
Highlights

நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேசமயம் பண்டிகை காலம் நெருங்குவதால், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும். திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடினால், அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமாகியுள்ளது. 

பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா 2ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் 3வது அலை குறித்த எச்சரிக்கை காரணமாக கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வருகிற அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாடி நபி மற்றும் நவம்பர் மாதத்தில் தீபாவளி, டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருகின்றன. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்தால் என்னாகும் என்று மத்திய அரசு சிந்தித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேசமயம் பண்டிகை காலம் நெருங்குவதால், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும். திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடினால், அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமாகியுள்ளது. 

மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மக்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் 144 தடை உத்தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!