#BREAKING பிளஸ் 2 தேர்வு தேதி மாற்றம்... அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 7:17 PM IST
Highlights

12ம் வகுப்பு மொழிப்பட தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். 

இந்த கூட்டம் முடிந்த கையோடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தன்னுடைய அறையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தேர்வு துறை இயக்குநர் உஷா ராணி ஆகியோருடன் கிட்டதட்ட ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு தேதியை மாற்றி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  மாற்று தேதியுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று கூறப்பட்டது.  

இந்நிலையில் 12ம் வகுப்பு மொழிப்பட தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,  ''2020-2021ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறுவதால், 03.05.2021 அன்று நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் 31.05.2021 அன்று நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும். மேலும், தேர்வுகள் நடைபெறும்பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்தது. தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாக, கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஒரு தேர்வு மட்டும் தள்ளி வைக்கப்படுவதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

tags
click me!