அரியலூர் அருகே சாதியை காரணம் காட்டி கோவிலில் திருமணம் செய்ய ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் நமக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்கிற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்தை சொக்கநாதபுரத்தில் இருக்கும் சீனிவாச பெருமாள் கோவிலில் வைத்த நடத்த உறவினர்கள் முடிவெடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டார் தரப்பிலும் செய்யப்பட்டு வந்தன.
undefined
திருமண நாளன்று மணமகன், மணமகள், உறவினர்கள் என அனைவரும் கோவிலுக்கு வந்தனர். அப்போது திடீரென அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் திரண்டு வந்து கோவிலில் வைத்து திருமணம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மணமக்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கோவிலில் வைத்து திருமணம் நடத்த கூடாது என்று கூறி கோவில் நடையை அடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவிலில் இதுபோன்று திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். பின்னர் பூட்டுகளை அகற்றி அதே கோவிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூரன்..! போக்சோவில் அதிரடி கைது..!