அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகிவந்த மாணவர் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் 19 வயதான விக்னேஷ். இரு ஆண்டுகளுக்கு முன்பு 12-ம் வகுப்பை முடித்த விக்னேஷ், நீட் தேர்வுக்காக தயாராகிவந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் எடுத்த விக்னேஷ், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகிவந்ததாக தெரிகிறது.
வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் விக்னேஷ் தேர்வு நெருங்க நெருங்க மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வு பதற்றத்தால் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு மனஉளைச்சல் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வை பல வகையான பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்வதில் சிரமம் இருப்பதாக கூறி நீட் தேர்வை ரத்து செய்ய பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், தொடரும் நீட் தேர்வால் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்வதும் வாடிக்கையாகி வருகிறது.