மோடி, அமித் ஷா போன்ற மோசமான சக்திகளிடமிருந்து இந்த நாடு விடுதலை பெறுவதற்கான இரண்டாம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் அரியலூர் வட்டத்திற்கு உட்பட்ட காரை, கொளக்காநத்தம், கொளத்தூர், கூத்தூர், ஆதனூர், மேலமாத்தூர் ஆகிய பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு ஆதரவாக சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பாஜக ஒரு வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து தூய்மையாக்கிவிடுவார்கள்; பிடிஆர் விமர்சனம்
அப்போது காரைப் பகுதியில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், காந்தியடிகள் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திரப் போர் நடைபெற்றது. இப்போது அதைவிட மோசமான சக்திகளான மோடி, அமித்ஷாவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான இரண்டாம் விடுதலைப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்திய அளவில் மக்களின் எதிரி பாரதிய ஜனதா கட்சி. எனவே இந்த தேர்தல் அதிமுகவிற்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ எதிரான தேர்தல் அல்ல. மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல்.
குஜராத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்களும், வங்கியில் பல ஆயிரம் கோடி கடனைச் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஓடிவிட்டனர். அந்த பணத்தை பொதுமக்களின் தலையில் வசூலிக்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டில் 40க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தூக்கி எறிய முடியும் எனவே பானை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று கேட்டுக்கொண்டார்.