அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே இறப்பிலும் இணைபிரியாத தம்பதி கணவன் இறந்த செய்தி கேட்டு, சோகத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கணவன் இறந்த செய்தி கேட்டு, சோகத்தில் மனைவியும் உயிரிழந்தார். நிஜவாழ்க்கையில் இணைபிரியாமல் வாழ்ந்ததைப் போன்று, இறப்பிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் (வயது 80). இவரது மனைவி குப்பாயி (70). இந்த தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இறுதி வரை கூலி வேலை செய்து வந்த இருவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத தம்பதியாக ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மணிக்கணக்கில் காத்திருந்து பலாப்பழத்தை பறித்துச் சென்ற ஓபிஎஸ்; துரை வைகோவுக்கு தீப்பெட்டி ஒதுக்கீடு
இவரது 4 மகன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தற்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் முத்தையன் மற்றும் அவரது மனைவி குப்பாயி இருவருக்கும் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்தையன் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். கணவன் இறந்த செய்தியை மனைவி குப்பாயிடம் யாரும் தெரிவிக்கவில்லை. முத்தையன் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது மேளம் அடித்த சத்தம் மற்றும் உறவினர்கள் அழுது கொண்டிருந்ததை பார்த்து, சந்தேகமடைந்த குப்பாயி அருகில் இருந்தவர்களிடம் விவரம் கேட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அப்போது கணவர் முத்தையன் இறந்த செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பாயி, சோகத்தில் மூழ்கி கணவர் இறந்ததை தாங்க முடியாமல் மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் கீழே மயங்கி விழுந்த குப்பாயி, கணவர் உடல் வைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே உயிரிழந்தார்.
வாழும்போது குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த முத்தையன், குப்பாயி தம்பதியர்கள், சாவிலும் இணைபிரியாமல் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரது உடல்களும் இன்று சொந்த ஊரான வட வீக்கம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.