உலகக்கோப்பை கால்பந்து திருவிழா-ரஷ்யா 2018…..அனைத்துக் கண்களும் ரஷ்யாவை நோக்கி...

First Published Jun 14, 2018, 9:59 AM IST
Highlights
world cup football opening ceremany in moscow


உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்‍களில் ஒன்றான உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று இரவு கோலாகலமாகத் தொடங்குகிறது. 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியால் தலைநகர் மாஸ்கோ விழாக்‍கோலம் பூண்டுள்ளது.

உலகின் மாபெரும் விளையாட்டுத்திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 21-வது பதிப்பு இன்று இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது.இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும்,சவூதி அரேபியா அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறுகிறது.

32 நாடுகள், 736 வீரர்கள், 12 விளையாட்டரங்கங்கள், 64 ஆட்டங்கள், சுமார் 5,81,118 நேரடிப்பார்வையாளர்கள் என அடுத்துவரும் ஒருமாத காலத்திற்கு விளையாட்டு உலகின் அனைத்துக் கண்களும் ரஷ்யாவை நோக்கியபடி சுழலும்.

21-வது உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 32 நாடுகளில் ஒவ்வொரு அணியும் ஒரு தனி கனவுகளுடன் களமிறங்குகின்றன.அந்த கனவுகளில் கோப்பையைக் கைப்பற்றுவோம் என சில நாடுகளும்,அரையிறுதிவரை முன்னேறித் திறமையை வெளிப்படுத்த சில நாடுகளும், காலிறுதிவரை முன்னேறினாலே அது வெற்றிதான் என நினைக்கும் நாடுகள், இழப்பதற்கு ஏதுமில்லை ஒருகை பார்த்துவிடலாம் என உற்சாகத்துடன் களமிறங்குகின்றன.

பல நாடுகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரையில் இதுவரையில் 8 நாடுகளே மாறி மாறி கோப்பையை வென்று வருகின்றன.இந்த 8 நாடுகளில் இந்த முறை 7 நாடுகள் மட்டுமே களத்தில் உள்ளன.இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இத்தாலி இந்த முறை தகுதிபெற இயலாமல் போய்விட்டது.

பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. அர்ஜெண்டினா, இங்கிலாந்து, உருகுவே இதுவரை கோப்பையை வெல்லாத போர்ச்சுக்கல் ஆகிய அணிகளும் பந்தயக் குதிரைகளாக வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்‍கும் வசதிகொண்ட இந்த லுஸ்னிகி அரங்கில், சர்வதேச கலைஞர்களின் வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் தொடக்‍க விழா களைகட்ட காத்திருக்‍கிறது.

சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த போட்டியைக்‍ காண உலகம் முழுவதிலும் இருந்து ஒருகோடி ரசிகர்கள் ரஷ்யாவுக்‍கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

இன்று தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை ஒருமாத காலத்திற்கு இந்த கால்பந்து திருவிழா உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களை தன்பக்‍கம் ஈர்க்‍க காத்திருக்‍கிறது

click me!