
Wimbledon R1: Can't-Miss Matches, Potential Upsets, and Rising Talents: டென்னிஸ் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயர்ந்த அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று (30.06.2025) தொடங்குகிறது. வரும் 13ம் தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 128 வீரர்கள் களமிறங்கும் நிலையில் 'நம்பர் ஒன்' வீரர் இத்தாலியின் ஜானிக் சினெர், 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர் ஆகியோர் இந்த தொடரில் மிகவும் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர்.
முதல் சுற்று ஆட்டங்கள்
விம்பிள்டன் தொடரின் முதல் நாள் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, கின்வென் ஜெங், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜாஸ்மின் பயோலினி ஆகியோர் போட்டியிட உள்ளனர். பிரெஞ்சு ஓபன் ரன்னர்-அப் அரினா சபலென்கா திங்கள்கிழமை கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனை எதிர்கொள்ள உள்ளார்.
ஜாஸ்மின் பயோலினி-அனஸ்டாசிஜா செவாஸ்டோவா பலப்பரீட்சை
அதே நேரத்தில் கார்லோஸ் அல்கராஸ் தொடக்க ஆட்டத்தில் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினிக்கு எதிராக விளையாடுவார். பவுலா படோசா மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோரும் திங்கட்கிழமை விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜாஸ்மின் பயோலினி, லாட்வியாவின் அனஸ்டாசிஜா செவாஸ்டோவாவை எதிர்கொள்வார். அதே நேரத்தில் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நவோமி ஒசாகா ஆஸ்திரேலியாவின் தாலியா கிப்சனுக்கு எதிராக தனது போட்டியை தொடங்குவார்.
ஜோகோவிச் வெல்வாரா?
24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் சினெர், அல்காரஸ் என்ற இளம் படையினரின் ஆதிக்கத்தால் 2023-ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் பட்டமும் வென்றதில்லை. இருமுறை அல்காரசிடம் கோப்பையை நழுவ விட்ட அவர் இந்த முறை கோப்பையை தட்டித் தூக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஜோகோவிச் தனது முதல் சுற்றில் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லரை எதிர்கொள்கிறார்.
பெண்கள் பிரிவில் அசத்தப்போவது யார்?
பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா, கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, சீனாவை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் ஜாங், ரஷ்யாவின் மிரா ஆன்ட்ரீவா, நடப்பு சாம்பியன் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா, இங்கிலாந்தின் எம்மா ரடுகானு ஆகியோர் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மிகவும் பாரம்பரியமான தொடர்
மிகவும் பிரபலமான, பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் போட்டி தொடர் புல்தரையில் நடக்கக்கூடிய ஒன்றாகும். மற்ற தொடர்களை போன்று அல்லாமல் விம்பிள்டன் டென்னிஸில் வீரர், வீராங்கனைகள் வெள்ளை உடை மட்டுமே அணிய வேண்டும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னில் தொடரை வெல்ல ஒவ்வொரு வீரர்களும் கடந்த சில மாதங்களாக கடின பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
விம்பிள்டன் பரிசுத்தொகை எவ்வளவு?
விம்பிள்டன் போட்டித் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.627 கோடியாகும். கடந்த ஆண்டை விட 7% அதிகமாக இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.35 கோடி பரிசு வழங்கப்படும். 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.17% கோடி கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கூட்டாக ரூ.8 கோடியை அள்ளுவார்கள். விம்பிள்டனில் முதல் சுற்றில் தோற்றால் கூட ரூ.77 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்ணையுடன் இந்த போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகின்றன. மற்ற நாள் ஆட்டங்களை பொறுத்தவரை இந்திய நேரப்படி மாலை 5.30 மணி, மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.