அஷ்வினுக்கு ஆப்பு..? அடுத்தது என்ன..?

By karthikeyan VFirst Published Aug 25, 2018, 9:48 AM IST
Highlights

இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் தவித்துவரும் அஷ்வின், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 

இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் தவித்துவரும் அஷ்வின், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 

முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே அஷ்வின் மிகவும் அவதிப்பட்டார். முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இடுப்பு வலியால் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 23 ஓவர்கள் வீசினார். தனது அருமையான ஸ்பின்னின் மூலம் கடைசி விக்கெட்டான ஆண்டர்சனை வீழ்த்தினார். 

மூன்றாவது போட்டியில் அஷ்வின் இடுப்பு வலியுடன் ஆடிய நிலையில், போட்டி முடிந்ததிலிருந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. எனினும் அடுத்த போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி தான் தொடங்குவதால், அதற்கு இடையில் அஷ்வின் குணமடைந்துவிடுவார் எனவும் நாளுக்கு நாள் அவரது காயத்திலிருந்து குணமடைந்துவருவதாகவும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், அஷ்வின் ஆடுவது அவசியம். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவர் அஷ்வின். வலைப்பயிற்சியின்போது அஷ்வின் செயல்படுவதை பொறுத்தே அவர் அடுத்த போட்டியில் ஆடுவாரா என்பது உறுதி செய்யப்படும். ஒருவேளை அஷ்வின் ஆடாவிட்டால், அவருக்கு பதிலாக யார் ஆடுவார் என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. குல்தீப் யாதவ் எஞ்சிய போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே ஒருவேளை அஷ்வின் ஆடாவிட்டால், அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

 

click me!