கிரிக்கெட் பல எல்லைகளை தொடும்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய கபடி தேசிய எல்லைகளைத் தொடும்…

First Published Jul 21, 2017, 11:05 AM IST
Highlights
When cricket reaches many borders kabaddi can also reach national boundaries ...


உலகில் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய கிரிக்கெட், பல எல்லைகளைத் தொடும் போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கபடி, தேசிய எல்லைகளைத் தொடும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணியின் உடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நிம்மகட பிரசாத், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரண் ஆகியோரோடு சேர்ந்து அந்த அணியின் தூதரான நடிகர் கமல்ஹாசன், அணி வீரர்கள் மற்றும் தமிழ் தலைவாஸ் அணியின் 'டி - சர்ட்டை' அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது:

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே தோன்றிய விளையாட்டு கபடி. தமிழர்களின் நீண்ட பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கபடி விளையாட்டு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

உலகில் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய கிரிக்கெட், பல எல்லைகளைத் தொடும் போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கபடி, தேசிய எல்லைகளைத் தொடும் என நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

இந்த தருணத்தில் பங்கெடுக்க வைத்தவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை பெருமையாகவும், கடமையாகவும் எடுத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன்.

தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வேண்டும். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இங்கு வந்து சேர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு பெருமையையும், பொறுப்பையும் சேர்த்தவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இரண்டு வயதில் பரமக்குடியை விட்டு வந்து விட்டதால், கபடியை என்னால் ஆட முடியவில்லை. அதன் பின்னர் ஆடியிருக்கிறேன். ஸ்டண்ட் நண்பர்களோடு பின்னாளில் படப்பிடிப்புத் தளங்களில் ஆடியிருக்கிறேன். அப்படி ஒரு தருணத்தில் மூக்கு உடைந்து விட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதில்லை. இப்போது அதே கபடிக்கு தூதராகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

'தமிழ் தலைவாஸ்' என்று பன்மையில் பெயர் வைத்ததில் இன்னும் மகிழ்ச்சி. இப்போதெல்லாம் ஒருமையில் பேசுவது வாடிக்கையாகி விட்டது. எலலோரும் இந்நாட்டின் மன்னரே என்பதும் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவின், தமிழகத்தின் கலாசாரத்தில் உள்ள வீர விளையாட்டுகள் எல்லாமே அமைதிக் காலத்தில் போரை மறந்துவிடாமல் இருப்பதற்காக விளையாடப்பட்டது. ரத்தத்தை பார்த்ததும் பயப்படுவது குணாதிசயம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
அலகு குத்துதல், ஏறுதழுவுதல் என எல்லா விளையாட்டுகளுமே அப்படித்தான் வந்திருக்கும். ஒலிம்பிக் வந்தது கூட அப்படித்தான்.

எனக்கு என்ன பெருமை என்றால், இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின் இதில் பங்கு கொண்டதுதான். அவரின் பெருந்தன்மை என்பதைவிட, இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். இதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அந்த சந்தோஷத்தில்தான். கபடி, சடுகுடு என பல பெயர்களில் இருக்கும் இந்த விளையாட்டை நாம் மறந்து போனது மாதிரியான வேதனை எதுவும் இருக்க முடியாது. அந்த விளையாட்டை இப்போது இவர்கள் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசினார்.

tags
click me!