21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றம்…

First Published Jul 21, 2017, 10:50 AM IST
Highlights
Chennai Open tennis tournament in shifted to pune


தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அடுத்தாண்டு முதல் மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் ஏடிபி போட்டி நடைபெறும் என்றும் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருக்கும் நிறுவனமான ஐஎம்ஜி ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி திடீரென மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டிருப்பது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றாக அமைந்துள்ளது.

ஐஎம்ஜி ரிலையன்ஸ் செய்தித்தொடர்பாளர் கூறியது:

“சென்னை ஓபனை மிகப்பெரிய வெற்றியடைய செய்ததற்காக தமிழக ரசிகர்களுக்கும், தமிழக அரசுக்கும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாராஷ்டிர ஓபனின்போது புணே, மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து டென்னிஸ் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் மிகப்பெரிய டென்னிஸ் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கிறோம். இளம் வீரர்களுக்கு தலைசிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, தரவரிசையில் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறோம்” என்று கூறினார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

“டென்னிஸ் போட்டியை எங்கள் மாநிலத்துக்கு வரவேற்கிறோம். மகாராஷ்டிர ஓபனை நடத்தவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் முன்னணி வீரர்களை அழைத்து வந்து விளையாட வைப்பதன் மூலம் மகாராஷ்டிர ஓபன் போட்டியை மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச் செல்வோம் என உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை 2019-ஆம் ஆண்டு வரை சென்னையில் நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த ஒப்பந்தத்தை ஐஎம்ஜி ரிலையன்ஸ் ரத்து செய்திருக்கிறது என்பது கொசுறு தகவல்.

tags
click me!