குட்டி வார்னர் வரப்போறத நெனச்சு மகிழ்ந்தோம்.. ஆனா மொத்தமும் தலைகீழா மாறிடுச்சு!! வார்னர் மனைவி பகிர்ந்த கலங்கவைக்கும் சம்பவம்

First Published May 25, 2018, 3:05 PM IST
Highlights
warner wife miscarrying after ball tampering scandal


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், மனமுடைந்து போயிருந்த நிலையில், தனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டதால், குடும்பமே நொந்து போய்விட்டதாக வார்னரின் மனைவி கேண்டீஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா சென்ற ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கியது. பந்தை சேதப்படுத்தியதற்கு வார்னரும் ஸ்மித்தும் பொறுப்பேற்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டதோடு, இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. 

இந்த விவகாரம், ஸ்மித் மற்றும் வார்னரின் கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிகழ்விற்கு பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய இருவருமே கண்ணீர் மல்க தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு நடந்த மிகவும் மோசமான சம்பவம் ஒன்றை வார்னரின் மனைவி கேண்டீஸ் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெண்கள் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் போது, தென்னாப்பிரிக்க வீரர் டி காக் என்னை பற்றி அவதூறாக பேசினார். அதுதான் அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்தது. அப்போதே இந்த விவகாரம் சாதாரணமாக முடியாது என்று எனக்கு தெரிந்துவிட்டது.

கேப்டவுனில் தான் நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தேன்.(ஏற்கனவே வார்னர்-கேண்டீஸ் ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்). அதை உடனடியாக வார்னரிடமும் கூறினேன். இருவரும் குட்டி வார்னர் வரப்போவதை நினைத்து மகிழ்ந்தோம்.

கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக நான் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அதை பார்த்ததுமே நான் மனதளவில் உடைந்துவிட்டேன். அதனால் நாங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப நேரிட்டது. அதிகதூரம் கடந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டோம். 

23 மணி நேர பயணத்துக்கு பிறகு சிட்னிக்கு சென்றோம். நான் கர்ப்பமாக இருந்ததால் என்னை வார்னர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார். சிட்னி விமான நிலையத்தில், ஊடகங்களை சந்திக்காமல் தனி வழியில் அனுப்பிவைக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஊடகங்களை சந்திக்க நேர்ந்தது. ஏற்கனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மனதளவில் நாங்கள் நொந்துபோயிருந்த நிலையில், ஊடகங்களை சந்தித்து பேசிய வார்னர், கண்ணீர் மல்க மிகவும் வருந்தி பேசினார். நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அப்போது யாருக்கும் தெரியாது.

உடலளவிலும் மனதளவிலும் பல வலிகளை கடந்து வீட்டிற்கு சென்றோம். வீட்டின் கழிவறையில் எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே வார்னரை அழைத்தேன். எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை இருவருமே உணர்ந்தோம். ஒருவரை கட்டித்தழுவி அழுதோம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் நொந்து போயிருந்த நிலையில், கருச்சிதைவு எங்களது மனங்களை மொத்தமாக உடைத்தது என வேதனையுடன் தெரிவித்துள்ளார் வார்னரின் மனைவி கேண்டீஸ். 
 

click me!