
இந்திய தடகள வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயதான வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால தேசிய சாதனையும் அவரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தத் த்ரில்லான இறுதிப்போட்டியில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, இந்திய தடகளத்தில் தன்னை ஒரு முக்கிய இடத்தில் நிலைநிறுத்தியுள்ளார் வித்யா.
ஜப்பானின் நகோயா நகரில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. வித்யா பந்தய எல்லையைக் கடந்தபோது, கடிகாரம் 54.75 விநாடிகளைக் காட்டியது. இது அவரது சிறந்த செயல்பாடு மட்டுமல்லாமல், இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு புதிய தேசிய சாதனையாகும். இதற்கு முன்பு, 'பய்யோலி எக்ஸ்பிரஸ்' பி.டி. உஷா 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 55.42 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளாக எந்தவொரு இந்திய வீராங்கனையாலும் இதை முறியடிக்க முடியவில்லை. ஆனால், வித்யா அந்த நேரத்தை 0.67 விநாடிகள் குறைத்து, தடகள களத்தில் ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் உஷாவின் சாதனையை முறியடிக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வந்தார். 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்சுற்றில், பி.டி. உஷாவின் அதே 55.42 விநாடிகள் நேரத்தை வித்யா எட்டினார். அப்போதே சாதனையைச் சமன் செய்தாலும், அதை முறியடிக்க முடியவில்லை. ஆனால், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தெளிவான இலக்கோடு களமிறங்கினார். இந்த முறை சாதனையைச் சமன் செய்யாமல், தன் பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார்.
2வது வெண்கல பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யாவுக்கு இது தொடர்ந்து இரண்டாவது வெண்கலப் பதக்கமாகும். இது முந்தைய போட்டியிலும் அவர் வெண்கலம் வென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல், நடப்பு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு 4x400 மீட்டர் தொடரோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, அவருக்குக் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவரான பி.டி. உஷா நேரில் பார்த்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தனது சாதனையை வித்யா முறியடித்ததைப் பார்த்து, அவரைத் தழுவி உஷா வாழ்த்து தெரிவித்தார். வித்யாவின் இந்த வரலாற்று வெற்றி, இந்திய பெண்கள் தடகளத்தில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இதே இறுதிப்போட்டியில், இந்தியாவின் மற்றொரு திறமையான வீராங்கனையான அனு ராகவன் 55.88 விநாடிகளில் பந்தயத்தை முடித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த நேரமாகும்.
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
புதிய சகாப்தத்தின் தொடக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு இது தொடர்ந்து மூன்றாவது பதக்கமாகும். இதற்கு முன்பு 2018 ஜகார்த்தா போட்டிகளில் அனு ராகவன் வெண்கலம் பெற்றுக் கொடுத்திருந்தார். மொத்தத்தில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலிருந்து வந்த வித்யா ராம்ராஜின் இந்த வெற்றி, வெறும் சாதனையோ பதக்கமோ கிடையாது; இது இந்திய தடகளத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.