சச்சின் சாதனையை முறியடித்த கோலி!!

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 1:29 PM IST
Highlights

விரைவாக 24 டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி பிராட்மேனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 
 

விரைவாக 24 டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி பிராட்மேனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 

இந்திய அணியின் கேப்டன் விரார் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். போட்டிக்கு போட்டி சாதனைகளை நிகழ்த்திவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என்றும் அழைக்கப்படுகிறார். 

ஒவ்வொரு போட்டியில் சதமடிக்கும்போதும் ஒரு சாதனையை முறியடிக்கிறார் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, முதல் போட்டியிலேயே அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் இரண்டாம் நாளான இன்று சதம் விளாசினார். இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் 24வது சதமாகும். 

மேலும் இந்திய மண்ணில் 3000 ரன்களை கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார். இந்தியாவில் தனது 11வது சதத்தை பதிவு செய்த கோலிக்கு, இது கேப்டனாக இந்திய மண்ணில் அவர் அடிக்கும் 8வது சதம் ஆகும். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 24வது சதத்தை பதிவு செய்த கோலி, 24 சதங்களை மிக விரைவாக அடித்த வீரர்களின் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார். 123வது இன்னிங்ஸில் 24வது சதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் 125 இன்னிங்ஸ்களில் 24 டெஸ்ட் சதத்தை விளாசியிருந்த சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 66 இன்னிங்ஸ்களில் 24 சதத்தை எட்டிய டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். 

எனினும் கோலியின் இந்த சாதனை நீண்டகாலம் நிலைக்காது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 117 இன்னிங்ஸ்களில் 23 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் ஆடாமல் உள்ளார் ஸ்மித். அடுத்த ஆண்டு தடை முடிந்து மீண்டும் வந்தவுடன், அடுத்த 5 இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை விளாசினால், கோலியின் சாதனையை ஸ்மித் முறியடித்துவிடுவார். 
 

click me!