சாஸ்திரியையும் கோலியையும் அவ்வளவு ஈசியா விட்டுவிட முடியாது!! பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Sep 10, 2018, 10:51 AM IST
Highlights

இங்கிலாந்தில் திணறிவரும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக ஆய்வு நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 
 

இங்கிலாந்தில் திணறிவரும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக ஆய்வு நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கையே ஓங்கிவருகிறது. 

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி செய்த தவறுகளைத்தான் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது. இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தொடரை இழப்பதற்கு முக்கியமான காரணம். விராட் கோலி மற்றும் புஜாராவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை. தொடக்க வீரர்கள் தவானும் ராகுலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி மட்டுமே அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆடுகிறார். புஜாரா, ரஹானே போன்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள் கூட ஒருசில இன்னிங்ஸ்களில் மட்டுமே சோபிக்கின்றனர். 

தொடக்கமும் சரியில்லை, பின்வரிசை மிடில் ஆர்டரும் சரியில்லை. இந்திய அணியின் பேட்டிங் முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும், பேட்டிங் யூனிட்டை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கைவிட பவுலிங் சிறப்பாகவே உள்ளது என்றாலும் கூட, பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்திவிடும் இந்திய பவுலர்கள், இங்கிலாந்து அணியின் பின்வரிசை மிடில் ஆர்டர்களையும் கடைசி வரிசை வீரர்களையும் வீழ்த்த முடியாமல் திணறிவருகின்றனர். இந்த தொடரில் பெரும்பாலான நேரங்களில் அந்த அணிக்கு கைகொடுத்து வெற்றிக்கு காரணமான திகழ்பவர்கள், சாம் கரண், பட்லர், ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் தான். குக், ரூட் போன்ற வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திவிடும் இந்திய பவுலர்கள், இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியாமல் திணறுகின்றனர். 

அதற்கு கேப்டன் விராட் கோலியின் மோசமான களவியூகமும் காரணம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி தொடர்ந்து ஒரே மாதிரியாக சொதப்பிவருகிறது. இங்கிலாந்து மண்ணில் கோலி தலைமையிலான இந்திய அணி திணறிவருகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரித்துள்ள பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், இங்கிலாந்து தொடர் குறித்து அணியின் மேலாளர் அறிக்கை சமர்ப்பித்த பிறகு அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!