பாண்டியா - விஜய் சங்கர் மோதல்..? தமிழக வீரர் விளக்கம்

By karthikeyan VFirst Published Feb 19, 2019, 3:17 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர். அணியில் இரண்டு ஆல்ரவுண்டர்கள் உள்ளதால் அவர்களுக்கு இடையே போட்டி நிலவுவது இயல்புதான்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர், உலக கோப்பைக்கான அணியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் அணியில் இணைந்தார் விஜய் சங்கர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார். 

ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், உலக கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வில் தனது பெயரையும் பரிசீலிக்கும் வண்ணம் செய்துவிட்டார். பவுலிங் போட அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றாலும் ஓரளவிற்கு வீசினார். ஆனால் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்தார். 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். உலக கோப்பையில், ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர் தேர்வாக இருப்பார் என்றாலும் விஜய் சங்கர் பென்ச்சில் இருப்பதற்கான மற்றும் தேவைப்பட்டால், ஹர்திக் - விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல்ரவுண்டர்களுமே களமிறங்கும் வாய்ப்பும் உள்ளது. 

எனினும் ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர். அணியில் இரண்டு ஆல்ரவுண்டர்கள் உள்ளதால் அவர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக பேச்சு அடிபடுவது இயல்புதான். பாண்டியா - விஜய் சங்கர் விஷயத்திலும் அப்படித்தான் நினைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சங்கர். 

இதுகுறித்து பேசியுள்ள விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிராக ஆடும்போது இருவரும் நிறைய விவாதித்தோம். வெவ்வேறான சூழல்களில் எப்படி பந்துவீசுவது என்பது குறித்த திட்டங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வேண்டுமானால் எங்களை போட்டியாளர்களாக பார்க்கலாம். ஆனால் அணிக்குள் நாங்கள் அப்படியில்லை என்று விஜய் சங்கர் விளக்கமளித்துள்ளார். 
 

click me!