
இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை இறுதி போட்டியில், இக்கட்டான நேரத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறிய விஜய் சங்கர், சென்னைக்கு எதிரான போட்டியில் பிராவோவின் பந்துவீச்சை துவம்சம் செய்து, தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார்.
இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதியது. இந்தியாவிற்கு 167 ரன்கள் இலக்கு. கடைசி மூன்று ஓவரில் 35 ரன்கள் தேவை. முஸ்தாபிஸர் வீசிய 18வது ஓவரை எதிர்கொண்ட விஜய் சங்கர், ஒரு சிங்கிள் கூட எடுக்க முடியாமல் திணறினார்.
4 பந்துகளை பேட்டில்கூட தொடாத விஜய் சங்கர், 5வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதன்பிறகு கடைசி இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியா, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியா வென்றதால், விஜய் சங்கர் பேட்டிங்கில் திணறியது பெரிய விவாதமாக ஆகவில்லை. ஆனால், விஜய் சங்கரின் பேட்டிங் திறன் குறித்த பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில், தன் மீது அன்று ஏற்பட்ட களங்கத்திற்கு தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். சென்னைக்கு எதிரான போட்டியில் 212 என்ற மெகா இலக்கை டெல்லி அணி விரட்டியது. முதல் நான்கு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். ரிஷப் பண்ட் அவுட்டானதும் சென்னை அணியின் வெற்றி உறுதி என நினைத்தவர்களை, திரும்ப பார்க்க வைத்தார் விஜய் சங்கர்.
பிராவோ வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார் விஜய் சங்கர். தோனியே சற்று மிரண்டார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில், 14 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. டெல்லி தோற்றது. ஆனால் விஜய் சங்கரின் கடைசி நேர அதிரடி, வெற்றிக்கான போராட்டம் அனைவரையும் கவர்ந்துவிட்டது.
தானும் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் தான், தன்னாலும் இக்கட்டான நேரத்தில் அதிரடியாக ஆடமுடியும் என்பதை தனது பேட்டிங்கால் நிரூபித்துவிட்டார் விஜய் சங்கர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.