பத்ரிநாத்துக்கு பதிலா இந்திய அணியில் கோலியை சேர்த்தேன்.. பதவியை இழந்தேன்!! 10 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பகீர் தகவல்

First Published Mar 8, 2018, 3:38 PM IST
Highlights
vengsarkar reveals the truth after ten years


தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியை, பத்தாண்டுகளுக்கு முன்னர், இந்திய அணியில் சேர்த்ததால்தான் தேர்வுக்குழு தலைவர் பதவியை இழந்ததாக வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வெங்சர்கார் கூறியதாவது: இந்திய இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்கள். U-23 வீரர்களை மட்டும் அணியில் சேர்த்தோம். அந்த வருடம் U-19 உலகக் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. எனவே அணியில் கோலியைச் சேர்த்தோம். ஆட்டங்களைப் பார்க்க தேர்வுக்குழுத் தலைவராக இருந்த நான் பிரிஸ்பேன் சென்றேன். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி தொடக்க வீரராகக் களமிறங்கினார். எதிரணியில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் சிலர் இருந்தார்கள். இந்திய அணியில் ஒருவரும் இல்லை. அந்த போட்டியில் 123 ரன்கள் குவித்த கோலி, கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. அப்போதே கோலியை இந்திய அணியில் சேர்த்துவிட வேண்டும் என நினைத்தேன்.

தேர்வுக்குழு உறுப்பினர்கள் என் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தோனியும் கிரிஸ்டனும் தயங்கினார்கள். அவர்கள் கோலியின் ஆட்டத்தை அவ்வளவாகப் பார்த்ததில்லை. நான் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துள்ளேன். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினேன். பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் என்பதால் அவரை அணியில் சேர்க்க அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். பத்ரிநாத்தா? கோலியா? என்ற நிலையில், நான் கோலியை தேர்வு செய்தேன். அதனால் பத்ரிநாத்துக்கு இடம் கிடைக்கவில்லை. 

அந்த சமயத்தில் என்.சீனிவாசன்(சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்) பிசிசிஐ-யின் பொருளாளராக இருந்தார். தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத்தை அணியிலிருந்து நீக்கியதால் சீனிவாசன் வருத்தமடைந்தார்.

எதனடிப்படையில் கோலியை சேர்த்துள்ளீர்கள்? பத்ரிநாத்தை ஏன் சேர்க்கவில்லை? என என்னிடம் சீனிவாசன் கேட்டார். அதற்கு, கோலி மிகத்திறமையான வீரர்; அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கூறினேன். ஆனால், பத்ரிநாத் தமிழக அணிக்காக அந்த சீசனில் 800 ரன்கள் எடுத்துள்ளார் என சீனிவாசன் என்னிடம் வாதம் செய்தார். பத்ரிநாத்துக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரிடம் சொன்னேன்.

பத்ரிநாத்துக்கு இப்போதே 29 வயதாகிவிட்டது. இனிமேல் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என கூறிய சீனிவாசன், மறுநாளே அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவாரிடம் ஸ்ரீகாந்தை அழைத்து சென்றார். அத்துடன் தேர்வுக்குழு தலைவராக இருந்த என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வந்தது என தெரிவித்துள்ளார்.

2006-ல் தேர்வுக்குழுத் தலைவரான வெங்சர்க்கார், 2008-ல் பதவியை இழந்தார். அவருக்கு அடுத்ததாக ஸ்ரீகாந்த், தேர்வுக்குழுத் தலைவர் ஆனார். பத்தாண்டுகளுக்கு பிறகு, தான் பதவியை இழந்ததன் காரணத்தை கூறியுள்ளார் வெங்சர்க்கார்.
 

click me!