போணியாகாத வீரர்களின் நீண்ட பட்டியல்!! ஐபிஎல் வரலாற்றில் முதல் சதமடித்த வீரரை மூலையில் தூக்கி போட்டி சோகம்

By karthikeyan VFirst Published Dec 19, 2018, 1:25 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் பல முக்கியமான வீரர்கள் விலை போகவில்லை. ஏலம் விடப்பட்ட 138 வீரர்களில் 79 வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய இருவரும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.8.4 கோடிக்கும் ஜெய்தேவ் உனாத்கத்தை அதே 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராத்வெயிட், பூரான், ஹெட்மயர் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலம் போயினர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், மும்பையை சேர்ந்த ஷிவம் துபே, முகமது ஷமி, கோலின் இங்கிராம் ஆகியோரும் நல்ல விலைக்கு ஏலம் போயினர்.

ஒரு காலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கை இம்முறை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை அணி எடுத்தது. அதுவும் முதல் சுற்றில் அவரை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை. 

இவ்வாறு இளம் வீரர்களுக்கு கிராக்கி நிலவிய நிலையில், பிரபலமான பல வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களில் முதன்மையானவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம். ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியிலேயே சதமடித்தவர் மெக்கல்லம். அவர் அடித்த 158 ரன்கள் என்பது தான் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை 2013 ஐபிஎல்லில்தான் கெய்ல் முறியடித்தார். ஆனாலும் மெக்கல்லமின் அந்த ஸ்கோர் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மெக்கல்லமிற்கு வயதும் அதிகமாகிவிட்டதால், அவர் முன்புபோல் அதிரடியாக ஆடுவதில்லை. கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அவரை எடுத்தது பெங்களூரு அணி. ஆனால் அவர் சோபிக்க தவறியதால் அவரை இந்த சீசனில் அந்த அணி கழட்டிவிட்டது. இந்நிலையில், அவரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்குக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை. 

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், மோர்னே மோர்கல், டேல் ஸ்டெயின், ஆடம் ஸாம்பா, ஹாசிம் ஆம்லா, உஸ்மான் கவாஜா, டேனியல் கிறிஸ்டியன், மனோஜ் திவாரி, புஜாரா, ஜேசன் ஹோல்டர், கிறிஸ் ஜோர்டான் ஆகிய வீரர்களையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
 

click me!