2018-ல் இந்திய வீரர்களின் டாப் 5 டி20 பேட்டிங்!! நம்ம தினேஷ் கார்த்திக் தான் நம்பர் 1

By karthikeyan VFirst Published Dec 31, 2018, 1:23 PM IST
Highlights

இந்த ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த முதல் இரண்டு இடங்களை ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா டி20 அரங்கில் தனது 4வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். 
 

2018ம் ஆண்டில் இந்திய வீரர்களின் மிகச்சிறந்த டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்களை ஏற்கனவே பார்த்தோம். டாப் 5 டி20 இன்னிங்ஸ்களை பார்ப்போம்.

2018ம் ஆண்டு இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது டி20 தொடர்களும் மிகச்சிறந்தவையாகவே அமைந்தன. இந்த ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த முதல் இரண்டு இடங்களை ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா டி20 அரங்கில் தனது 4வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். 

2018ம் ஆண்டின் டாப் 5 டி20 இன்னிங்ஸ்களை பார்ப்போம்.

1. தினேஷ் கார்த்திக் - 29* vs வங்கதேசம்

இந்தியா - இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு நிதாஹஸ் டிராபி டி20 தொடர் இலங்கையில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 166 ரன்கள் அடித்தது. 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற கடினமான சூழல் உருவானது. 19வது ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், அந்த இக்கட்டான சூழலில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை திரில் வெற்றி பெற செய்தார். 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். இந்த போட்டியில் வெறும் 8 பந்துகளில் 29 ரன்களை குவித்தார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக்கின் இந்த இன்னிங்ஸ்தான் இந்த ஆண்டின் மிகச்சிறந்தது. இதற்குப் பிறகுதான் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. 

2. ரோஹித் சர்மா - 111* vs வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன்களை குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 4வது சர்வதேச டி20 சதம். சர்வதேச டி20யில் 4 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

3. கேல் ராகுல் - 101* vs இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டி20 தொடரை மட்டும்தான் வென்றது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் ராகுல் 101 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தார். 

4. ஷிகர் தவான் - 72 ரன்கள் vs தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் வெறும் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்கள் அடித்தார் தவான். அதுதான் இந்த ஆண்டின் நான்காவது சிறந்த டி20 இன்னிங்ஸ்.

5. ஷிகர் தவான் - 92 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி தான் வென்றது. இதில் சென்னையில் நடந்த போட்டியில் அபாரமாக ஆடிய தவான் 92 ரன்களை குவித்தார். இதுதான் ஐந்தாவது சிறந்த டி20 இன்னிங்ஸ்.
 

click me!