பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் தான் இலக்கு.. பெரும் சவால்கள் நிறைந்த பயணம்..! பி.வி.சிந்து பிரத்யேக பேட்டி

By Asianet TamilFirst Published Aug 4, 2021, 2:13 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கடுமையாக உழைப்பேன் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றிருக்கிறது. மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார். மகளிர் பாக்ஸிங் 69 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா வெண்கலம் வென்றார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையுடன் நாடு திரும்பினார். வெண்கலத்துடன் டெல்லி வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

வெண்கலத்துடன் நாடு திரும்பிய பி.வி.சிந்து, ஏசியாநெட் நியூஸுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பேசிய பி.வி.சிந்து, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்றது, பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. எனது பயணம் ரொம்ப வித்தியாசமானது. நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. அனைவரும் இணைந்து ஒரு அணியாக பயணித்திருக்கிறோம். நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்த தொடர்களில் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று நம்புகிறேன் என்றார்.

சிந்துவின் தொடர் வெற்றிகள், எந்தளவிற்கு இந்திய மகளிருக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கு உத்வேகம் அளிக்கும் என்பது குறித்து கேட்டதற்கு பதிலளித்து பேசிய பி.வி.சிந்து, மகிழ்ச்சியாக இருக்கிறது. மகளிர் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளிலும் கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் வெகுறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். நம்மால் ஜெயிக்க முடியும் என மகளிர் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை தான், நாம் இன்னும் பெரும் உயரத்திற்கு உயர்த்தி செல்லும் என்று தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றால் ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது மற்றும் அதனால் ஏற்பட்ட சவால்கள் குறித்து பேசிய பி.வி.சிந்து, உடலளவிலும் மனதளவிலும் ஃபிட்னெஸை பராமரிப்பதுதான்  கடும் சவாலாக இருந்தது. இந்த ஒலிம்பிக்கில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை மிஸ் செய்தேன். ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்ட இந்த காலத்தில் எனது ஆட்டத்தின் மீது முழுக்க முழுக்க கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சி செய்தேன். லாக்டவுன் எனது ஆட்ட உத்திகளை மேம்படுத்திக்கொள்ள உதவியது. பெருந்தொற்று நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில் பயிற்சி செய்ய வேண்டியதும் முக்கியமாக இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இப்போதிலிருந்தே கடுமையாக பயிற்சி செய்து, நன்றாக ஆடி தங்கம் வெல்வேன் என நம்புகிறேன் என்று சிந்து தெரிவித்தார். 
 

click me!