
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 26 பந்துகளில் 33 ஓட்டங்களும், அந்தோணி தாஸ் 17 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிய காந்தி 9 ஓட்டங்களில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக், முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்தார் அபிநவ் முகுந்த்.
இந்த ஜோடி அசத்தலாக ஆட, 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், அபிநவ் முகுந்த் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தூத்துக்குடி அணி.
இந்த சீசனில் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தூத்துக்குடி அணி தோற்கவில்லை என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.