இந்த சீசனுடன் ஐபிஎல்லுக்கு முழுக்கு போடும் 3 இந்திய வீரர்கள்!!

By karthikeyan VFirst Published Feb 26, 2019, 1:35 PM IST
Highlights

2013, 2015, 2017 ஆகிய மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றபோதும் 2018ல் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றபோதும் அணியில் இருந்தவர். 

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 

இதுவரை நடந்து முடிந்த 11 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறையும் ஹைதராபாத் அணி(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது. 

இந்நிலையில், 12வது சீசன் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் திகழ்கின்றன. இந்த இரண்டு அணிகளில் மட்டுமே ஆடிய பெருமையுடையவர் ஹர்பஜன் சிங். 

ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை வென்றபோதும், அந்த அணியில் ஹர்பஜன் சிங் இருந்தார். 2013, 2015, 2017 ஆகிய மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றபோதும் ஹர்பஜன் சிங் அணியில் இருந்தார். 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், 11வது சீசனில் சென்னை அணியில் ஆடினார். 2018ம் ஆண்டு சென்னை அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த சீசனை சிஎஸ்கே வென்றது. இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகளில் 4 முறை இடம்பெற்றிருந்த பெருமையுடைவர் ஹர்பஜன் சிங். இந்த சீசனிலும் சென்னை அணிக்காக ஆடுகிறார். 38 வயதான ஹர்பஜன் சிங் ஆடும் கடைசி சீசன் பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும். இந்த சீசனுடன் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறலாம். ஏனெனில் இந்த சீசனுடன் அவர் சிஎஸ்கே அணியிலிருந்து கழட்டிவிடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இனிமேல் அவரை வேறு எந்த அணியும் எடுக்கவும் வாய்ப்பில்லை. அதனால் அவர் ஆடும் கடைசி சீசன் பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும். 

ஹர்பஜன் சிங்குக்கு அடுத்து இந்த சீசனுடன் ஒதுங்க வாய்ப்புள்ள வீரர் யுவராஜ் சிங். ஒரு காலத்தில் அதிரடி மன்னனாக திகழ்ந்த யுவராஜ் சிங்கை, அதிகமான தொகைக்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுத்த ஐபிஎல் அணிகள், கடந்த இரண்டு சீசன்களாக கண்டுகொள்வதேயில்லை. அதிலும் இந்த சீசனிற்கு முதற்கட்ட ஏலத்தில் அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாவது கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரது அடிப்படை விலைக்கு எடுத்தது. எனவே அடுத்த சீசனில் யுவராஜ் சிங் ஆடுவதற்கு வாய்ப்பில்லை. 

அதேபோல ஐபிஎல்லில் கிங்காக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிங் தோனி, அடுத்த சீசனில் ஆடுவாரா என்பது சந்தேகம்தான். வரும் மே மாதம் நடக்க உள்ள உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து உலக கோப்பைக்கு பின் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் ஐபிஎல்லிலும் ஆடுவதற்கான வாய்ப்பில்லை. ஐபிஎல்லில்லிருந்தும்தான் ஒதுங்குவார். 

எனவே இந்த சீசனுடன் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் தோனி ஆகிய மூவரும் ஓய்வுபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!