
கால்பந்து வீரர்கள் ஜீஜீ லால்பெக்லுவா, குர்பிரீத் சாந்து, வீராங்கனை ஒய்னம் பெம்பெம் தேவி ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்க வேண்டும் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
இந்திய கோல் கீப்பரான குர்பிரீத் சாந்து, பிரபல ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். அத்துடன், நார்வேயில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில், சிறந்த அணியான ஸ்டாபேக் அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜீஜீ, இந்திய கால்பந்து அணியின் வீரர்களில் முக்கியமானர். தற்போது, ஐ லீக் கால்பந்துப் போட்டியின் மோகன் பங்கன் அணி சார்பிலும், ஐஎஸ்எல் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி சார்பிலும் விளையாடி வருகிறார்.
அதேபோல், 2016-ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சில்லாங்கில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஒய்னம் பெம்பெம் தேவி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மகளிர் கால்பந்தில் ஜாம்பவானான தேவிக்கு அர்ஜுனா விருது வழங்குவது, கால்பந்து விளையாட்டில் அவரது பங்களிப்புக்கு பொருத்தமான கெளரவமாக இருக்கும் என்று கருதுகிறோம் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) தெரிவித்துள்ளது.
இந்த மூவருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று ஏஐஎஃப்எஃப் பரிந்துரைத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.