வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்தியா; 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி…

 
Published : Feb 14, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்தியா; 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி…

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்றது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாதில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் கேப்டன் கோலி 204, முரளி விஜய் 108, ரித்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 127.5 ஓவர்களில் 388 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 127, ஷகிப் அல்ஹசன் 82, மெஹதி ஹசன் 51 ஓட்டங்கள்.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு "பாலோ-ஆன்' கொடுக்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது.ஆரம்பம் முதலே வேகமாக ஆடிய இந்திய அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் புஜாரா ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களும், கோலி 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அஹமது, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 459 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா 9, ஷகிப் அல்ஹசன் 21 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

கடைசி நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் கூடுதலாக ஒரு ரன் மட்டுமே சேர்த்த ஷகிப் அல்ஹசன் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு மகமதுல்லாவுடன் இணைந்தார் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்தது. 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுத்த ரஹிம், அஸ்வின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சபீர் ரஹ்மான் களமிறங்க, மகமதுல்லா 115 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் மதிய உணவு இடைவேளையின்போது 67 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்திருந்தது வங்கதேசம்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து சபீர் ரஹ்மான் (22), மகமதுல்லா (64) ஆகியோரை இஷாந்த் சர்மா வீழ்த்தினர்.

பின்னர் வந்தவர்களில் மெஹதி ஹசன் 23, தைஜுல் இஸ்லாம் 6, தஸ்கின் அஹமது 1 ரன்னில் அவுட்டாக, 100.3 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம்.

இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரட்டைச் சதமடித்த இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!
2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!