கடைசி ஒருநாள் போட்டி.. அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி!!

By karthikeyan VFirst Published Feb 2, 2019, 10:25 AM IST
Highlights

ராயுடு, கேதர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா என யாருமே சோபிக்கவில்லை. சாஹல் அடித்த 18 ரன்கள்தான் இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்ததை அடுத்து கடைசி போட்டியில் அதிரடியான மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும் நான்காவது போட்டியில் படுமோசமாக ஆடி படுதோல்வியை பதிவு செய்தது. வெறும் 92 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

அந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டனர். ராயுடு, கேதர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா என யாருமே சோபிக்கவில்லை. சாஹல் அடித்த 18 ரன்கள்தான் இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர். கடந்த போட்டியில் காயத்தால் தோனி ஆடாததும் ஒரு இழப்பாக இருந்தது. தோனி ஆடியிருந்தால் ஓரளவிற்கு ஸ்கோரை உயர்த்தியிருப்பார். 

தோனி காயமடைந்திருந்ததால் கடைசி போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெளிவுபடுத்தியுள்ளார். தோனி காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் கடைசி போட்டியில் கண்டிப்பாக ஆடுவார் என்று தெரிவித்துள்ளார். எனவே தோனி மீண்டும் அணிக்கு திரும்புவதால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்படுவார். 

அதேபோல குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை ஆடாத ஜடேஜாவிற்கு கடைசி போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு விட்டு, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ஷமி இந்த போட்டியில் களமிறக்கப்படலாம். கடந்த போட்டியில் ஆடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் மற்றும் ஷமி ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இறங்குவர். இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்து வீசுவார். 

கடைசி போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப்/சாஹல், ஷமி, கலீல் அகமது. 
 

click me!