கோலி விஷயத்தில் புவனேஷ்வர் குமார் அதிரடி!!

By karthikeyan VFirst Published Feb 1, 2019, 5:15 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கோலியும் தோனியும் ஆடவில்லை. இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி 92 ரன்களில் ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. 

முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் அதற்கு நேர்மாறாக ஆடியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் அறிமுக போட்டியில் சோபிக்க தவறிவிட்டார். 

இந்திய அணி, ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. அவர்கள் சோபிக்காத போட்டிகளில் மிடில் ஆர்டர்கள் நிலைத்து ஆடி அணியை மீட்டெடுக்க தவறுகின்றனர். குறிப்பாக கோலியை சார்ந்த அணியாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கான மோசமான ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றனர். 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கோலியும் தோனியும் ஆடவில்லை. இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி 92 ரன்களில் ஆல் அவுட்டானது. கோலி மற்றும் தோனி ஆகியோர் ஆடாததன் விளைவாக ரசிகர்கள் சிலர் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஆடாதது மட்டுமே காரணமல்ல என்றாலும், அதுவும் ஒரு காரணம் என்பதில் மறுப்பதற்கில்லை. 

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், நாங்கள் கடந்த சில மாதங்களாக சிறப்பாக ஆடிவருகிறோம். இதுபோன்ற போட்டிகள் எப்போதாவது அமையும். இந்த போட்டி, அணியில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்கு நல்ல வாய்ப்பு. நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருக்கலாம். ஆனால் பேட்டிங் ஆடுவது கடினமாக இருந்தது. அவர்களுக்கு இது நல்ல பாடமாக அமைந்திருக்கும். கோலி போன்ற ஒரு வீரர் அணியில் ஆடாதது இழப்புதான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருக்க விரும்பவில்லை என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார். 
 

click me!