இளம் வீரருக்கு வாய்ப்பு.. தோனியா தினேஷ் கார்த்திக்கா? நான்காவது போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 29, 2019, 4:40 PM IST
Highlights

தொடர்ச்சியாக ஆடிவரும் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

முதல் போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி மீது இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. இதையடுத்து தொடர்ச்சியாக ஆடிவரும் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

அதனால் நான்காவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் களமிறக்கப்படுவார். மற்றபடி இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்பட பெரிதாக வாய்ப்பில்லை. தொடரை வென்றுவிட்ட காரணத்தால் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஷமி அல்லது புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட்டு கலீல் களமிறக்கப்படலாம். 

தோனி காயத்திலிருந்து குணமடைந்துவிட்டால் நான்காவது போட்டியில் களமிறங்குவார். இல்லையெனில் தினேஷ் கார்த்திக் ஆடுவார். 

நான்காவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), தவான், கில், ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப், சாஹல், புவனேஷ்வர் குமார்/கலீல் அகமது, ஷமி.
 

click me!