தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள்... கீழடியில் தந்தத்தினால் ஆன காய்கள்.. மார்தட்டிய முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2022, 9:22 PM IST
Highlights

தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க  விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். 

தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க  விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.அப்போது கீழடி ஆகழ்வாராய்ச்சியையும் செஸ் ஒலிம்பியாட்டையும் தொடர்பு படுத்தி பேசியதாவது:- 

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.

தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப் பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:  தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.

கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது. கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.

இதையும் படியுங்கள்: செஸ் ஒலிம்பியாட் லோகோ சதுரங்க குதிரைக்கு தம்பி என்று எதற்கு பெயர்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு. கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு. அரசனும் உண்டு, அரசியும் உண்டு. போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. 'ஆனைக்குப்பு' என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. 'ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே' என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது. 

அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது. அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது. ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது.

அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு! இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

click me!