
பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் (Asian Youth Games 2025) தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணியும், இந்திய பெண்கள் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை படைத்தன.
இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ந்திருந்தார். இதேபோல் ஆண்கள் கபடி அணியில் தமிழகத்தை சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டியிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் கோவில்பட்டியை சேர்ந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 60 கிலோ ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்காக இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 114 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க்கில் 142 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார்.
நெல்லை வீராங்கனை எட்வினாவும் 2 பதக்கம்
இதேபோல் திருநெல்வேலியைச் சேர்ந்த தடகள வீரர் எட்வினா ஜேசனும் 400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், மெட்லி ரிலேவில் இந்திய அணியின் ஒரு பகுதியாக மற்றொரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். இதில் எட்வினா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் (CDS) பயனாளியாக இருப்பதை கண்டு பெருமைப்படுவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இவர்கள் இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, #AsianYouthGames2025-இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தம்பி மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
தமிழக அரசு துணை நிற்கும்
முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு நான் வந்திருக்கும் வேளையில், இந்த இனிய செய்தியைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் நமது #DravidianModel அரசு துணைநிற்கும்'' என்றார். இதேபோல் வெள்ளி வென்ற நெல்லை மகள் எட்வினா ஜேசன் இன்னும் நெடுந்தூரம் ஓடி, மென்மேலும் பதக்கங்களைத் தேடிட வாழ்த்துகிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.