பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி!! கடைசி ஓவரில் ஹைதராபாத் திரில் வெற்றி

First Published May 6, 2018, 7:29 AM IST
Highlights
sunrisers hyderabad defeats delhi daredevils


ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துவிட்டது.

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 36வது ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். மேக்ஸ்வெல் வெறும் 2 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். வழக்கம்போல அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவின் அதிரடியால் டெல்லி அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 36 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்து பிரித்வி ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் டெல்லி அணியின் ரன் வேகம் குறைந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் சங்கர் அதிரடியாக ஆடினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். ஹேல்ஸ் 45 ரன்களிலும் தவான் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டே 21 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து வில்லியம்சனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதிவரை நின்று வெற்றியை உறுதி செய்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ்டியன் வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி விளாசி ஹைதராபாத் அணியை பதான் வெற்றியடைய செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துவிட்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது டெல்லி அணி. 

16 புள்ளிகளை பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகும். டெல்லி அணிக்கு எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துவிட்டது.

ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் ஏற்கனவே தலா 14 புள்ளிகளை பெற்றுவிட்டன. அந்த இரண்டு அணிகளும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும்.

பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன. அவை இரண்டும் இன்னும் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். கொல்கத்தா அணிக்கு இன்னும் 5 போட்டிகளும் பஞ்சாப் அணிக்கு இன்னும் 6 போட்டிகளும் எஞ்சியுள்ளன.

மற்றபடி மும்பையும் பெங்களூருவும் எஞ்சிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். ஆனால், பஞ்சாபும் கொல்கத்தாவும் முன்னணியில் இருப்பதால், இனிவரும் போட்டிகள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். 
 

click me!