சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்த சென்னை அணி, நேற்று சிறப்பாக பந்துவீசியது. மெக்கல்லம், கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
மந்தீப் சிங், கோலின் டி கிராண்ட்ஹோம், முருகன் அஸ்வினும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடிய பார்த்திவ் படேல் மட்டும் அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிம் சௌதி 36 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் படேலின் அரைசதம் மற்றும் சௌதியின் கடைசி நேர அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.
128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தோனியின் அதிரடியால், 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. சாஹல் வீசிய 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் தோனி.
இந்த ஆட்டம் முடிந்ததும், மைதானத்தில் இருந்த தோனி ரசிகர் ஒருவர், தடுப்புகளை மீறி ஓடிவந்து மைதானத்திலேயே தோனியின் காலில் விழுந்தார். இதைக் கண்ட சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். மைதானமே அதிர்ந்தது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தோனி. தோனியின் தீவிர ரசிகர்கள் அவ்வப்போது தோனியின் காலில் விழுவது வழக்கமாக உள்ளது.
தோனியின் தீவிர ரசிகர், மைதானத்தில் அவரது காலில் விழுந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.