தோனியை தூக்கிட்டு உலக கோப்பைக்கு போனா விளங்காது!! தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 2:40 PM IST
Highlights

2019 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆட வேண்டியதன் அவசியம் குறித்து சுனில் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார். 
 

2019 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆட வேண்டியதன் அவசியம் குறித்து சுனில் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார். 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். 

அண்மைக்காலமாக சரியாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் தோனி. ஐபிஎல்லில் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய தோனி, சிறப்பாக கேப்டன்சி செய்து மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்ததோடு, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். 16 போட்டிகளில் பேட்டிங் ஆடி 455 ரன்களை குவித்தார்.

ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன.

கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து இந்திய அணியில் தோனி அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம், அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாடுதான். எப்போது வேண்டுமானாலும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பலாம். ஆனால் அவரது அனுபவம் ஒவ்வொரு போட்டிக்கும் தேவை. கேப்டனுக்கு ஆலோசனை, பவுலர்களுக்கு அறிவுரை என தோனியின் அனுபவம் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறது. 

சீனியர் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் என்ற முறையில் தனது அனுபவத்தின் வாயிலாக அவர் வழங்கும் ஆலோசனைகள், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் நின்றுகொண்டு அனைத்து பவுலர்களின் திறமை மற்றும் பலகீனம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி அவரவர்க்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்குவார். தோனியின் ஆலோசனை நல்ல பலனளிக்கும். 

எனவே தோனிக்கு இருக்கும் எதிர்ப்பைவிட அவரது அனுபவமான அறிவுரைகள் மற்றும் விக்கெட் கீப்பிங் 2019 உலக கோப்பை வரை தேவை என்ற தோனிக்கு ஆதரவான குரல்கள்தான் வலுவாக உள்ளன. 

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், 2019 உலக கோப்பை வரை விராட் கோலிக்கு தோனி தேவை. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. உலக கோப்பைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் தோனி ஃபார்முக்கு வந்துவிடுவார். அது பெரிய விஷயமல்ல. ஆனால் ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் அவசியம். அதனால் தோனி கண்டிப்பாக ஆட வேண்டும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!