ஒரே சதம்.. 5 சாதனைகள்!! எதிரணிகளை தெறிக்கவிடும் ரோஹித்

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 12:48 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் மற்றும் ராயுடுவின் அபார சதத்தால் இந்திய அணி 377 ரன்களை குவித்தது. 378 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் 4 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 137 பந்துகளில் 162 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, சாதனைகளை வாரி குவித்துள்ளார். ரோஹித் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பார்ப்போம். 

1. நேற்று 4 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியதில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத்தள்ளி தோனிக்கு அடுத்த இரண்டாமிடத்தை ரோஹித் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 218 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். 195 சிக்ஸர்களுடன் சச்சின் இரண்டாமிடத்தில் இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் இரண்டு  சிக்ஸர்கள் விளாசியதுமே சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித், நேற்றைய போட்டியில்ம் 4 சிக்ஸர்கள் விளாசியதால் 198 சிக்ஸர்களுடன் தோனிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் 2 சிக்ஸர்கள் விளாசியதும் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துவிடுவார். டிவில்லியர்ஸ், மெக்கல்லம் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை அடுத்த போட்டியில் ரோஹித் முறியடிக்க வாய்ப்புள்ளது. விரைவில் தோனியின் சாதனையையும் முறியடித்துவிடுவார். 

2. நேற்றைய போட்டியில் ரோஹித் 150 ரன்களுக்கு மேல் குவித்தது 7வது முறை. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை முதல் போட்டியில் சதமடித்தபோதே நிகழ்த்திவிட்டார் ரோஹித். ஆனால் இந்த போட்டியிலும் 150 ரன்களுக்கு மேல் அடித்ததால் 7வது முறையாக 150 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா இன்னும் பலமுறை இதே சம்பவத்தை செய்யலாம் என்பதால் இவரது சாதனை எதிர்காலத்தில் முறியடிக்கப்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

3. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களில் சேவாக்கிற்கு(219 ரன்கள்) அடுத்த இடத்தில் ரோஹித் உள்ளார். முதல் போட்டியில் 152 ரன்கள் குவித்த ரோஹித், அப்போதே சேவாக்கிற்கு அடுத்த இடத்தை பிடித்தார். பின்னர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 157 ரன்கள் குவித்து ரோஹித்தின் சாதனையை கோலி முறியடித்தார்.  இப்போது கோலியைவிட 5 ரன்கள் அஅதிகமாக அடித்து கோலியை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை மீண்டும் பிடித்துள்ளார் ரோஹித்.

4. 2018ம் ஆண்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித்.

 

5. இந்த ஆண்டில் மட்டுமல்லாமல் 2013ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை தொடர்ச்சியாக ஆறாவது முறையாக, காலண்டர் ஆண்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ரோஹித் உள்ளார். 

2013 - 209 ரன்கள் vs ஆஸ்திரேலியா

2014 - 264 ரன்கள் vs இலங்கை

2015 - 150 ரன்கள் vs தென்னாப்பிரிக்கா

2016 - 171* ரன்கள் vs ஆஸ்திரேலியா

2017 - 208 ரன்கள் vs இலங்கை

2018 - 162 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்

click me!