நான் சதம் மட்டும் அடிச்சுட்டேன்னா.. ரோஹித் சர்மா என்ன சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 11:05 AM IST
Highlights

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் சதம் கடந்துவிட்டால், அதை இரட்டை சதமாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் ரோஹித். நேற்றைய போட்டி முடிந்ததும் அதுகுறித்து ரோஹித் கருத்து பகிர்ந்துள்ளார். 
 

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் சதம் கடந்துவிட்டால், அதை இரட்டை சதமாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் ரோஹித். நேற்றைய போட்டி முடிந்ததும் அதுகுறித்து ரோஹித் கருத்து பகிர்ந்துள்ளார். 

ரோஹித் சர்மாவை தொடக்கத்திலேயே வீழ்த்திவிட வேண்டும். எதிரணி அதை செய்யத்தவறி களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், பெரிய இன்னிங்ஸை ஆடிவிடுவார். அதன்பிறகு அவரை வீழ்த்துவது என்பது கடினம். களத்தில் நிலைத்துவிட்டால் முழு இன்னிங்ஸையும் முடித்துவிடுவார். 

ரோஹித் சதமடிக்கும் போட்டிகளெல்லாம், மிகப்பெரிய ஸ்கோரை எட்டியுள்ளார். அதனால்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 7 முறை 150 ரன்களை கடந்த ஒரே வீரராக ரோஹித் திகழ்கிறார். இவையெல்லாம் சாதாரண விஷயமல்ல. சதமடித்த பிறகு இன்னிங்ஸின் கடைசி நேரத்தில் அவரது ஆட்டம் அபரிமிதமாக இருக்கும். சிக்ஸர்களாக விளாசி வானவேடிக்கை காட்டிவிடுவார். 

அப்படித்தான் மூன்று இரட்டை சதங்களை விளாசினார். அதிலும் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் என்பது எப்போது நினைத்து பார்த்தாலும் மிரட்சியை ஏற்படுத்தும். ஒரு அணி அடிக்க வேண்டிய ஸ்கோரை ஒரு வீரரால் அடிக்க முடியும் என்றால் அது ரோஹித்தால்தான் முடியும். 264, 209, 208 என மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 7 முறை 150 ரன்களை கடந்த ஒரே வீரர் ரோஹித் சர்மா. இவற்றில் 2, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அடிக்கப்பட்ட சதங்கள். முதல் போட்டியில் 323 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது 152 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார் ரோஹித். நேற்று நடந்த நான்காவது போட்டியில் 162 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 100 பந்துகளில் சதம் விளாசிவிட்டு, அதன்பிறகு மிகக்குறைந்த பந்துகளில் அடுத்த சதத்தையோ அல்லது அரைசதத்தையோ விளாசி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி மெகா ஸ்கோரை எட்டவைப்பார் ரோஹித்.

நேற்றும் அப்படித்தான். 60 பந்துகளில் அரைசதம், 98 பந்துகளில் சதம், 137 பந்துகளில் 162 ரன்கள் என மிரட்டிவிட்டார். இந்த இன்னிங்ஸிற்கு பிறகு ரோஹித்தை நேர்காணல் செய்த சஞ்சய் மஞ்சரேக்கர், ரசிகர்கள் உங்களிடம் சதத்தை எதிர்பார்க்கவில்லை. 33வது ஓவரிலேயே சதமடித்துவிட்டதால் உங்களிடமிருந்து இரட்டை சதத்தை எதிர்பார்த்தார்கள் என்றுகூறி சதத்தை இரட்டை சதமாக மாற்றும் சூட்சமம் குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய ரோஹித் சர்மா, இதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு(சிரித்துக்கொண்டே சொன்னார்). வெஸ்ட் இண்டீஸ் மாதிரியான அணிக்கு எதிராக ஆடும்போது எது நல்ல ஸ்கோர் என்பதை கணிக்க முடியாது. அவர்கள் எப்போது எப்படி ஆடுவார்கள் என்று கணிக்க முடியாதவர்கள். எனவே முடிந்தவரை கடினமான ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சதத்தை இரட்டை சதமாக மாற்றுவது குறித்து பேசிய ரோஹித், ஒருமுறை களத்தில் நிலைத்து நின்று சதமடித்த பிறகு, நாம் அவுட்டாகிறோம் என்றால், அது நமது தவறாகத்தான் இருக்கும். ஏனென்றால் களத்தில் நிலைத்த பிறகு மிகவும் எளிதாக பந்துகளை எதிர்கொள்ளலாம், ஆடுகளத்தை பற்றியும் தெரிந்துவிடும். அப்படியிருந்தும் நாம் அவுட்டானால், அது பவுலரின் திறமையால் இருக்காது, நாம் செய்யும் தவறுகளால்தான் இருக்கும் என்று நம்புகிறேன். எனவே நான் ஒவ்வொரு முறை சதமடித்த பிறகும், என்னால் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டு தான் ஆடுவேன். மேலும் எனது ஆட்டத்தால் அணியை முடிந்தவரை நல்ல ஸ்கோரை எட்ட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
 

click me!